
மக்களே!
நான் அறிவேன் உங்களை
உள் நெஞ்சின் வலிகளை,
அன்றொரு காலத்தில் நாம்
ஒரே தீவில்
ஒரே கொள்கையின் காதலில்
சுயநலமெதுவுமின்றி
நம்மை சுற்றி எழும்
ஆயுத முனைகளுக்கெதிராக
பாய்ந்து கொண்டோம் வாழ்ந்த படி...
தூக்கமில்லா இரவுகளில்
பகலிருளில்
விடியலுக்காய்
விழிப்போடு சோராமல் சேர்ந்திருந்தோம்!
தளராத நம்பிக்கையோடு
உயிர்கொடுத்து
மகிழ்வோடு
மெல்ல மெல்ல உயிர் வாழ்ந்தோம்!
கனவுப் பசியுடன்
தூரமில்லை போகும் இலக்குவென
நடந்து சென்றோம்,
போரின் காரணங்கள் பல
பொய்யாய் நீ சொல்லி
தாயவளை பிரிந்து விட்டு
பெரும்
கடலதனை கடந்து சென்று
துயரின்
முகம் பார்த்தபடி
நெஞ்சு அழுகையில் முகத்தில் சிரித்த படி
பெரும் தேசம் கடந்து சென்றாய் அன்று -தாய்
தேச உணர்வை எங்கு புதைத்தாய் இன்று ?
ஒளிரும் பனிபொழியும் நாட்டில்
உன் வாழ்க்கையை
அகதி என்னும்
அடையாள அட்டையோடு
உனது இன அடையாளம் தொலைத்து
தினம் தினம் அழிந்தபடியுள்ளாய் !
அவசிய தேசத்தை நீ மறந்து போய்
அந்நிய தேசத்தில் நீ மகிழ்ந்து போய்
என்ன இன்பம் நீ காண்பாய்
அட உணர்வில்லா கல்லாய் நீ போனாய்!
உன்னையே அறிவாயாக
உன்னையே நிறுவுவாயாக
இறுதியில்
அகதியாகவே இறந்து போவாயோ
தேசம் காக்க மறந்த ஈனப் பிறவியாய்
புழுத்துப் போவாயாக!
நீ
ஒட்டிக் கொண்ட தேசத்தில்
கொட்டுகின்ற பனிப்பொழிவில்
நீ மட்டுமல்லாது ,
உனதுணர்வும் உறைந்து போயே கிடக்கிறது !
ஆனால்
என் கவிதை ரத்தக்கறையில்
எழுதப்படுகிறது!
No comments:
Post a Comment