Pages

Monday, August 27, 2012

அத்தருணத்தில் பகைவீழ்த்தி





அட மழையில் ஒரு ராத்திரி 

நனைந்த படியும், 
வெந்து போய்க்கிடக்கிறாள் 
என் தேசத் தாய்! 


அன்றைய பகல்பொழுதில் தான் 
நான்கு நாள் 
இடைவெளிக்கு பின்னர் 
சந்திகளில் சாவுகள் ஆரம்பிக்கப்பட்டன! 


நீண்ட பெரும் பகை மூட்டத்தின் 
விலகலின் பின்பு 
கந்தகம் தின்று கொண்டிருந்தது 
அவர்களை . . . 


தேசத்தின் சொந்தக்காரர்களை 
நிர்வாணமாக்கி கொண்டிருக்கிறது காலம், 

ஆடைகளின்றி மேனி காட்டுதல் 
மட்டுமே நிர்வாணமன்று, 
சொந்தமாய் 
நாடில்லாமல் நடமாடித் திரிதலும் 
நிர்வாணமாய் உணரும் தன்மானத்தவர்கள் அவர்கள்! 

பாட்டனின் கதைகள் சொல்லி 
காற்றிலாடிய பனைகள் கழுத்தறுக்கப்பட்டும், 
வயல்களில் கந்தகம் விதைக்கப்பட்டும், 
உயிர்கள் சிதறிய வீதிகள், 
ஊனமாக்கப்பட்ட உடல்கள், 
எரிந்த வீடுகள், 
என இழப்புகள் நீண்டு போனாலும். . . 

சாம்பலாகாத உணர்வுகளுடன் 
ஆயுதப் பேய்களிடம் 
நாள் நாளாய் கரைவது உயிர் மட்டுமே ! 

எங்களுடைய வாழ்க்கை 
ஈசலுக்கு சமனானது, 
அதைவிட 
சாபமானது 
அன்றே பிறந்து அன்றேயிறக்கலாம்! 

எங்கள் வீட்டின் 
கிடுகு வேலிகளுக்கும் மின்சாரம் பாய்ச்சப்படும் 
வேறு பாய்ச்சலுக்கு பயந்து . . . ? 

வாழ்க்கையில் ஒரு அத்தியாயமும் 
வழிமுறையில் ஒரு கட்டமும் 
முடிந்திருக்கிறதே 
தவிர, 
இப்போதும் 
தீராமல் எரிந்து கொண்டுதானிருக்கிறது. . . 
எங்கள் 
வலியினதும் வேட்கையினதும் 
அகல்விளக்கு ! 

விம்மியும் வராத அழுகை 
தணிந்து போகிறது 
அழுகைக்கு பயனில்லையென தெரிந்து ? 

கடுமையான தீக்காற்று 
கானகத்தில் கருக்கொண்டிருக்கிறது 
என் தேச இடர்களை எரிக்க . . .! 

எங்கள் ஆன்மாவின் நிழலாய் 
குடியிருக்கும் தேசம் 
எமக்கென ஆவதற்காய்! 
நான் மடிந்து போகலாம் 
மன மகிழ்வோடு 
அத்தருணத்தில் பகைவீழ்த்தி . . .!

No comments:

Post a Comment