Pages

Thursday, July 19, 2012

பதுங்கி கிடக்கிறது என் பாய்ச்சல்





தோழனே 
நினைவுபடுத்திக் கொண்டே இரு 
தரையில் இருந்து வரும் நீரின் ஊற்றில் 
மடிந்து போனவர்களின் குருதிகள் ஊறி வருவதை ! 

நாங்கள் ஓடி விளையாடிய முற்றங்களில் 
எங்கள் ரத்தம் குடித்த
அந்த நரிகளின் பற்களுக்கு
பல்லு தீட்டி விடும் மானமில்லா
மனிதர்களுக்கு மரணவாசல் பிரசவிக்கும் !!

குருதி வடுக்களின் சுவடுகள்
மறந்து எம்மை
கடித்து குதறிய கயவரின்
காலடி நக்கி பிழைக்கும்
தாசி மகன்களை சரித்திரம் மன்னிக்காது !


விடியும் எலா பொழுதும்
வடியும் எம் கண்ணில் நீர் -இது
முடியும் ஒரு பொழுது பகை
குடியும் அழியும் அப்பொழுது !!!

தோழா !
நான் பகையை முட்டி வீழ்த்திய
பாதைச் சுவடுகளில்
பதுங்கி கிடக்கிறது என் பாய்ச்சல்
பேரிடியாய் எழுவதற்கு........

இப்போது
நீ
உன் நிகழ்காலத்தின் மறைவு
தெரியாமலே
எதிர் காலத்தையும் இழக்கிறாய்
தேச உணர்வில்லாமல் !

Sunday, July 1, 2012

அடையாளம் மறக்கும் தமிழர்கள்



ஆதி காலம் தொட்டே கலாச்சாரம்,பண்பாடு என அது பற்றிய வரலாறுகளையும் பண்பு கொண்ட ஒரு சமூகத்தையும் தனக்கென தனியான ஒரு அடையாளத்தை கொண்ட ஒரு இனமே எமது தமிழினம் என்பதில் நாம் தமிழராக பிறந்ததையிட்டு பெருமை கொள்ளலாம். பண்பாட்டு விழுமியங்களையோ அல்லது சமூக கலாச்சாரத்தையோ தமிழினம் ஒரு போதும் விட்டுக்கொடுப்பதில்லை. 


வளர்ந்து வரும் இந்த நாகரிக உலகத்தில் மேலைத்தேய பண்பாடுகள் மீது சில தமிழர்களுக்கு ஏற்பட்ட மோகத்தினால் இப்போது மேலைத்தேய  பண்பாடுகளே எம்மை ஆண்டு கொண்டிருக்கிறதென்பது மிக கேவலமான ஒரு செய்தி. அதாவது எங்களுக்கு சொந்தமான பண்பாட்டை விட்டு விட்டு யாரினதோ பண்பாட்டை பின்பற்றுவது எம்மை நாமே தாழ்வு படுத்திக் கொள்ளும் இழிவான செயலேயன்று வேறு ஏது?


இந்த நிலை இப்போது மாற்றம் பெற்றிருக்கிறது தமிழ் சமுதாயத்தில் அதுவும் இலங்கையில் பண்பாட்டுக்கு பெயர்போன,உலகமெலாம் பண்பாட்டின் உதாரணமாய் விளங்கிய யாழ் மண்ணில் சமகாலத்தில் அதாவது போருக்கு பின்னைய இன்றைய நாட்களில் மிகவும் கேவலமான அல்லது கீழ்த்தரமான நிகழ்வுகள் இடம்பெறுகிறது என்றால் அங்கு வாழும் தமிழர்கள் பண்பாட்டை மறக்கிறார்கள் அல்லது பண்பாடு பற்றிய கவனமில்லாமல் இருக்கிறார்கள் என்பதே மறைந்து கிடக்கும் வெட்கபடக்கூடிய உண்மை .


நடந்து முடிந்த போருக்கு பின் தமிழர்கள் வாழும் இடங்களில் கற்பழிப்புகள் ,கொலைகள் என அரேங்கேறும் இப்படியான காட்சிகள் யாழ் மாவட்டத்தில் கூடுதலான இடங்களில் இடம்பெறுவதின் மூல காரணமாய் இருப்பது ஒரு தமிழ் வாலிபன் அல்லது ஒரு தமிழ் யுவதி என்பது தான் அதிர்ச்சி அடைய வைப்பதும் அதே நேரம் கவலையடைய வைப்பதும் எமை போன்ற பண்பாடு பற்றிய கவனம் உள்ளவர்களுக்கு .


குறிப்பாக நாம் கவனிக்க வேண்டிய இன்னுமொரு விடயம் யாழ் மண்ணில் இளம் வயதினர் சிலர் இப்படியான நடத்தைகளில் ஈடுபட்டாலும் பல அதே வயதை ஒத்த இளம் வயது இருபாலரும் சமுதாய அக்கறையோடு கலாச்சார விழிப்புணர்வோடு அவர்கள் தமது அடையாளங்களை மறந்து விடாமல் வாழ்ந்து வருகிறார்கள் என்பது "புளி வார்த்த வயிறுக்குள் பால் வார்க்கிறது கொஞ்சம்". 


இது இப்பிடியிருக்க சில பள்ளிக்கூடங்களில்  சிலமாணவர்கள் புகை பிடிப்பதாகவும் பள்ளிக்கூடத்தில் கூட பண்பாடு காணமல் போய்விட்டதாகவும் சமுதாய அக்கறையோடு உள்ள மாணவர்கள் சிலர் என்னோடு பேசும் போது கவலையோடு சொல்லியிருந்ததை நான் உங்கள் மூலமாய் நினைவு கொள்கிறேன். யாழ் மாவட்டத்தில் சிலபிரபல பாடசாலைகளில் இடம்பெறும் மிககேவலமான பெண் மாணவிகள் மீதான சில ஆசிரியர்களின் (ஆண் ) நிகழ்வுகள் மூடி மறைக்கப்பட்டு குறிப்பிட்ட ஆசிரியர் பணியிடம் மாற்றப்பட்டது சிலருக்கு தெரிந்த விடயமே .?.உள்ளாடைகளோடு சூரியக் குளியல் குளிக்கும் இங்கிலாந்து நாட்டவன் பார்த்தால் கூட அருவருப்பு அடைந்துவிடுமளவுக்கு இன்றைய யாழ் மண்ணின் நிகழ்வுகள் ஆயத்தம் பார்க்கின்றன .






நான் யாழிலிருந்து வந்த ஒரு ஆசிரியர் ஒருவரை சிலமாதங்களுக்கு முன்பு ஒரு இலக்கியவிழாவில் காண முடிந்தது .நீண்ட நேரமாய் எமது மண்ணின் இன்றைய நிலைதொடர்பாக பேசினோம். நிகழ்வு முடிவடைந்த பின்னர் அவர் விடைபெறும் போது "தம்பி இன்னும் சில வருடங்களில் நாம் எதை இப்போது கலாச்சார சீரழிவு என்று கவலைப்படுகிறோமோ அது தான் கலாச்சாரமாய் ஆகிவிடும் போல் உள்ளது. அது தான் பயமாக இருக்கின்றது "என்றார் மிகக் கவலையும் பண்பாடு பற்றிய ஒரு கவனமும் அவரது முகத்தில் தெரிந்தது . அவரது முகத்தில் சிறிது நேரம் நான் என்னை பார்த்தேன் எனலாம் .


வெளிநாட்டில் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் வாழ்க்கையும் அவர்களின் பிள்ளைகளின் கலாச்சார ,பண்பாடு பற்றிய மாறுதல்களை மேலைத்தேய பண்பாடுகளில் ஊறிப் போய் தமது பண்பாடுகளே தெரியாமல் வாழ்ந்து வருகிறார்கள் என்பதையும் சீரழிவுகளையும் கடந்த ஆனந்த விகடன் பத்திரிகையில் எழுத்தாளர் இளைய அப்துல்லா எழுதிய "தலைமுறை நிழல்கள்" கட்டுரை புலம் பெயர் நாட்டில் வாழும் தமிழர்களின் சீரழிவுகளை கதையூடாக சொல்லியிருந்தார்.இப்போது யாழ் மண்ணிலும் அது போல தான் இடம் பெறுகிறது என்பது தான் பெரும் கவலை .


நாம் ஒன்றை மறந்துவிடக்கூடாது ஒரு இனத்தின் சமூக பண்பாட்டு விழுமியங்களை கட்டிப் பாதுகாப்பது அந்த இனத்தில் பிறந்த ஒவ்வொரு சீவனுக்கும் இருக்கும் கடமை என்பதை நாம் அனைவரும் உணர்ந்து கொள்ளவேண்டும். அப்படி பாதுகாக்க மறந்தால் அந்த சீவன் சுடுகாட்டுக்கு போக வேண்டும்!


திட்டமிட்டோ அல்லது மறைமுகமாகவோ சீரழிக்கப்படும் தமிழர்களின் கலாச்சாரத்தை நாம் பாதுகாக்கவே முன் வரவேண்டுமே தவிர எமது பண்பாடு அழிய உந்துசக்தியாகவோ ,உறுதுணையாகவோ இருந்து விடக்கூடாது. எமது நிழல்களையும் அடையாளங்களையும் தொலைத்து விட்டால் நாம் எந்த இனம் என்பதே தெரியாமல் போய் விடும். ஒரு இனத்தின் அடையாளம் கலாச்சாரம் ,மொழி ,பண்பாடு கருத்தில் கொள்வோம் இளைய சமுதாயமே !


எழுத்துருவாக்கம் 
கவிஞர் அகரமுதல்வன் 

Wednesday, June 27, 2012

இழந்த மண்


இனிமேல்
நீ
என்னை சுமக்க முடியாது ?

என்னை
சுமந்த 
உன்னையே
காப்பாற்ற முடியாமல்
கடல் கடந்து
காணாமல் போய்விட்டேன் !

நீ
எனக்கென்று
வைத்திருந்த இடங்களில்
என்னை பார்க்கமுடியாது !

உன்னை மீட்கும்
அந்த
புனித
பிறவியாக
நான் வரவில்லை !

அந்த
நாயகர்களின் கருவிகளும்
இப்போது
என்னிடமில்லை !

கவிதைகளாய் கண்ணீர் விட
எழுதுகோலை மட்டும்
கரம் பிடித்துள்ளேன் !

என்னுடைய மகிழ்ச்சி
இறந்து போய்
ஈமக் கிரிகைகளும்
செய்தாகிவிட்டன !

வீதியெங்கும்
மரணவீட்டின் அடையாளமாய்
தோரணங்கள்
அழுத படி தொங்கின !

ஒரு நாழிகை
நின்று
நிமிர்ந்து பார்க்கிறேன் !

ஒவ்வொரு நிமிடங்களும்
நொறுங்கி போகிறது
ஒரு கண்ணாடியாய்
மரண பயத்தில் !


ஒரு இலையுதிர்காலமாய்
வறண்டு போயிருக்கிறாய்
என்னை சுமந்த
அன்னை மண் நீ !

என்
எழுதுகோல்
கவிதை எழுதுகிறது,
இப்போது இலையுதிர் காலம்
தான்
வசந்த காலத்திற்காய் என !

என் தேசம்













பள்ளிக் கூட வளவுகளிலும் கண்ணி வெடி வயல்கள் 
விதைத்து விட்டிருக்கிறது போர்,
என் தேசமெங்கும் எறிகணைகள் பித்தெறிந்த
அம்மாக்களின் மார்புகளிலிருந்து கசிந்தோடிய 
குருதி காய்ந்து போயிருக்கிறது,
அவர்களின் குழந்தைகளின் முகத்தில்.
நிர்வாண நிலையினிலே இரத்தச் சகதிக்குள்
நீந்தியவ்ர்களின் தசைகள் மறைக்கபடுகின்றன அபிவிருத்தியாய்...

தமிழச்சிகளின் யோனிகளினால் 

அரச மர இலைகளுக்கு பச்சையம் தயாரிக்கப்படுகிறது,
முள்ளிவாய்க்காலுக்கு பின்
எங்களூர் பூவரசம் பூக்கள் மஞ்சளாய் பூப்பதில்லை,
கனகாம்பரம் பூக்கள்வாசம் வீசுவதில்லை.
எருக்களைகள் மட்டுமே தேசமெங்கும் பரவி கிடக்கிறது ...

இரவின் மகிழ்ச்சியில் முத்தம் கொடுத்து நான் உறங்கிய
வீட்டு முற்றத்தில் கந்தகம் பரவிக் கிடக்கிறது ,

பேய்களின் காலடிச் சத்தம் கேட்டு
தும்பி பிடித்து மகிழும் எங்கள் ஊர் சின்னன்கள்
தூக்கத்தில் மிரண்டு எழும்புகின்றனர்!

இரும்புத் தொப்பிகள் எங்களின் வீதிகளில்
உள்ள மரங்களை எல்லாம் ஆக்கிரமித்திருக்கிறது,
துப்பாக்கிகளை விட அவன் குறிகளால் திட்டமிட்டு
அழிக்க படுகிறது என் வருங்கால சந்ததி!

நாங்கள் சுதந்திரமாய் பறந்து பாடிய தேசத்துள்
முட்கம்பிகள் மீண்டும் வேலிகள் மீது கொடியாகின்றது,

துட்டகை முனுக்களால்
அரச மரத் தேவனுக்கு
எங்கள் ரத்தத்தில் அபிடேகம் செய்யப்படுகிறது!

என் உறவுகளின் அங்கங்களின் போர்ச் சிதைவுகளிலிருந்து
கண்ணை மூடிய படியே வருகிறான் புத்தன்!

துப்பாக்கி ஏந்திய கயவர் கூட்டம்
குவளைகளை ஏந்திய படியே உலா வருகிறது
இரத்தங்களை ஓட விடாமல் சேகரிக்க

என் பள்ளி முட்கம்பிகளானது,
என் வீடு கண்ணீரானது,
என் கோவில் ரத்தங்களானது,
மொத்தத்தில் என் தேசம் சுடுகாடாய்யானது ....

Wednesday, June 13, 2012

விருட்சத்தின் உரம் குருதி


இப்போதும் நறுமணமாயிருக்கிறது
ரத்த ஆறுகள்
தேசக் கனவிற்காய்
சிந்திய குருதி என்பதால்


எமது
குருதி தடங்களையெல்லாம்
அழித்தொழிக்க
திட்டமிட்டார்கள்
தீயவர்கள்


வாசனைப் பூக்கள் மலர மறந்து
ரத்த வாடையில் மலர
மகிழ்ச்சி செத்து
கானல் புன்னகை மட்டும் மிஞ்சியது.
கூடவே
மரணத்தில் மகிழ்ந்து
மலர்ந்து
கொண்டன எங்கள் முகங்கள்!


எமது தாய்மண்
நிறமாறிப்போனது.
விடுப்பு இல்லாமல்
எப்போதும் ஒப்பாரி ஒலித்துக் கொண்டது,
மரணங்கள் பிரசவிக்கும் மண்ணாகியது


என் இனமழித்தல் அங்கு அரசபணியானது
எமைக் கொல்லும் விமானங்கள்
தேசியப் பறவையாய் பிறப்பெடுத்தது


தமிழர்கள் எப்போதும் மரணத்தில்
மகிழ்ந்து கொண்டார்கள்
மண்ணின் கனவோடு
தெருவெங்கும் பிணமாகி,
பயிலுமிடமெலாம்
தசைகள் சிதறி,
மூலஸ்தானமெல்லாம் குருதி அபிசேகம்
தமிழர் குருதியில்
செய்தனர் பகைவர்
குசியாய் இருந்தனர் கடவுள்களும்-தமிழன்
கசியும் ரத்தத்தில்


தமிழினம்
தேசக் கனவின் மகிழ்ச்சியோடு
மரணித்துக் கொள்கிறது ,
சுவாசித்துக் கொள்கிறது


அப்போது வழிந்த
ரத்த ஆறு
வரும் தேசத்தின் வணங்குமிடம்,
அரும்பும் விருட்சத்தின் உரம்!

Sunday, June 10, 2012

மீண்டும் உயிர்த்தெழுவேன்






தோழர்களே !
நானும் சிலுவையில்
அறையப்பட்டவன் தான்
இன்னும்
உயிர்க்கவேயில்லை -என்
குருதிகளும்
தசைகளும்
தரையோடு முத்தமிடுகின்றன!
வலிகளும்
பாவங்களும்
என்னோடு சொந்தமாகின்றன!
சிலுவையில்
நின்ற படியே
கனவு காண்கிறேன்
இனி வரும் நாட்களில்
மீண்டும்
உயிர்த்தெழுவேன்.

கவிராசனுடன் ஒரு கவிக் குழந்தை





கவியுலகின் பேரரசு வைரமுத்து ஐயா அவர்களுடன் ஈழத்துக் கவிஞர் அகரமுதல்வன்